

ஜெய்பூர்,
இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் கொண்டஅட்டை ஆதார் அடையாள அட்டை ஆகும். இதில் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கி இருப்பதுடன் அவை ரகசியமுடன் வைத்து பாதுகாக்கப்படும்.
இந்த நிலையில், ஆதார் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை பயன்படுத்தி பல முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும் கூறப்பட்டது. இதுபோன்ற தவறான நோக்கத்தில் ஆதார் தகவல்களை பயன்படுத்துவோருக்கு இந்திய அரசு அபராதம் விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடென் கூறியுள்ளார். இவர் அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியவர்.
இந்த நிலையில் வீடியோ கான்பரென்ஸ் வழியே அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது, நல்ல விசயத்திற்காக ஆதாரை அமல்படுத்துவதில் இந்திய அரசு தீவிரம் காட்டினால், அந்த தகவலை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக அரசு அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் கண்காணிப்பு விவகாரம் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்பொழுது, உங்களுக்கு உரிமைகள் இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது என எந்த அரசாங்கமும் கூறாது. அரசாங்கம் ஆனது, புதிய திட்டம் ஒன்றை கொண்டு வருகிறோம். அது மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களை காக்கும் என்று கூற வேண்டும் என கூறியுள்ளார்.
இளைஞர்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்களை கவனத்தில் கொள்வதில்லை என்பது கற்பனை. அவர்கள் தங்களது ரகசியங்களை பற்றி அதிகம் கவனத்தில் கொள்கின்றனர் என்றும் ஸ்னோடென் கூறியுள்ளார்.