

புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்த நிலையில், பிரதமர் மோடி கடந்த மார்ச் 24ந்தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி
அறிவிப்பு வெளியிட்டார். இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஊரடங்கை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள், திரை அரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதனால் சமீபத்தில் புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடுவதில் இருந்து மக்கள் விலகி இருந்தனர்.
அவர்கள் தங்கள் வீடுகளிலேயே பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். ஊரடங்கால் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று காலை 10 மணியளவில் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, நம் நாட்டை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு. ராணுவ வீரர்களை போல நீங்கள் நாட்டுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் வலிமையை நிலைநாட்டுவது, அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.
நிறைய பண்டிகைகளை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உங்களுடைய வேதனையை நான் உணருகிறேன்.
நாடு முழுவதும் நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ளது. இதற்கு சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது என கூறினார். நாட்டு மக்களிடம் அவர் 25 நிமிடங்கள் வரை உரையாற்றினார்.