விளையாட்டின் வலிமை தேசத்தின் அடையாளத்தை உயர்த்துகிறது- பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்தார்.
விளையாட்டின் வலிமை தேசத்தின் அடையாளத்தை உயர்த்துகிறது- பிரதமர் மோடி பேச்சு
Published on

ஆமதாபாத்,

இந்தியாவில் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் இன்று முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெறுகின்றன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

இரு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்தார். ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் குஜராத் முதல் மந்திரி பூபேந்திரா பட்டேல் உள்ளிட்ட மாநில அமைச்சகம், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவர்களை தவிர தொடக்க விழாவில் ஒலிம்பிக் வீராங்கனைகள் பிவி சிந்து, நீரஜ் சோப்ரா, ரவிக்குமார் தஹியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.இவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒற்றுமை ஜோதியை வழங்கினர்.

அதே போல் தொடக்க விழாவில் இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி,`விளையாட்டின் மென்மையான வலிமை தேசத்தின் அடையாளத்தையும் பிம்பத்தையும் பன்மடங்கு உயர்த்துவதாக தெரிவித்தார்.

இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

மக்கள் தொகையில் இளைஞர்களை அதிகம் கொண்ட நமது நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய விளையாட்டு வீரர்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் குறைவான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றனர். இப்போது, அவர்கள் 300 க்கும் மேற்பட்ட சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.

விளையாட்டு வீரர்களிடம் நான் அடிக்கடி சொல்வது, வெற்றி என்பது செயலில் இருந்து தொடங்குகிறது என்பதை தான். விளையாட்டுத் துறையில் வீரர்களின் வெற்றி, அவர்களின் வலுவான ஆட்டம், மற்ற துறைகளிலும் நாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கிறது.

விளையாட்டின் மென்மையான சக்தி தேசத்தின் அடையாளத்தையும், தேசத்தின் பிம்பத்தையும் பன்மடங்கு உயர்த்துகிறது. எந்தவொரு நாட்டின் வளர்ச்சியும், மரியாதையும் அந்த நாட்டின் விளையாட்டுத் துறையின் வெற்றியோடு நேரடித் தொடர்பு உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் விளையாட்டு பட்ஜெட் கிட்டத்தட்ட 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com