

திருவனந்தபுரம்
கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இதில், கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் ஆகியோருக்கு கோடிகளில் லஞ்சம் கொடுத்ததாக, சரிதா நாயர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். இதையடுத்து முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து, கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி, அன்றைய முதலமைச்சர் உம்மன் சாண்டி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சரிதா நாயர், 9 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால், மனைவியைக் கொலைசெய்த வழக்கு தொடர்பாக, பிஜு ராதாகிருஷ்ணன் சிறைவாசம் அனுபவித்துவருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணமாக இந்த ஊழல் வழக்கு கருதப்பட்டது. இதுதவிர, காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் இந்த ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற மோசடி வழக்கு விசாரணை அறிக்கையை நீதிபதி சிவராஜன், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கடந்த மாதம் நேரில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை இன்று காலை கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறினார். இந்தக் குற்ற ஆவணத்தில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது பல குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தது வெளியாகியுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையில் 214 சாட்சிகள் விசாரிக்கபட்டு உள்ளது மற்றும் 812 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 4 தொகுதிகளாக 1073 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்ய்ப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் உம்மன் சாண்டி குற்றவாளி என கூறப்பட்டு உள்ளது. மேலும் சரிதா நாயர் கூறிய பாலியல் குற்றசாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.