சிவசேனா கட்சியில் இருந்து ஒருவர் மகாராஷ்டிரா முதல்வராவார் - உத்தவ் தாக்கரே

சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிரா முதல்வராக வருவார் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியில் இருந்து ஒருவர் மகாராஷ்டிரா முதல்வராவார் - உத்தவ் தாக்கரே
Published on

மும்பை,

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜனதா- சிவசேனா கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா 150 இடங்களிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடுகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜனதா 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைபற்றியது. தேர்தலுக்கு பின்னர் பா.ஜனதாவுக்கு வெளியில் இருந்து சிவசேனா ஆதரவு தெரிவித்து வந்தாலும், பல்வேறு இடங்களில் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே மும்பையின் வோர்லி தொகுதியில் களம் காண்கிறார். சிவசேனா அரசியல் வரலாற்றில் தாக்கரே குடும்பத்தில் இருந்து நேரடி தேர்தல் அரசியலில் முதன்முறையாக ஆதித்யா தாக்கரே களம் கண்டுள்ளார்.

இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு உத்தவ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில், ஒரு நாள் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராக வருவார். சிவசேனாவை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கி காட்டுவேன் என எனது தந்தை பால் தாக்கரேவிடம் உறுதி அளித்துள்ளேன். அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அதற்கான காலம் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதற்காக உடனடியாக முதல்வராகவோ, துணை முதல்வராகவோ ஆகமாட்டார். அவருக்கு சில அனுபவங்கள் தேவை. அவரும் அதையே விரும்புகிறார். பா.ஜனதா ஆட்சியில் இருந்தாலும், மக்களை பாதிக்கும் விஷயம் என்று வந்தால் நாங்கள் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கத்தான் செய்வோம். எனது மகன் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதற்காக நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விட மாட்டேன். எப்போதும் தீவிர அரசியலில் தான் இருப்பேன் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com