

சண்டிகர்,
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா,ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்தனர். சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. இந்த மரணம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் அவரது குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரது குடும்பத்தினர் கூறியதாவது:-
சோனாலியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சுதிர் பால் சங்வான், இதற்கு முன்பும் சோனாலிக்கு விஷம் கொடுக்க முயன்று, அவரது சொத்துக்களை அபகரிக்க முயற்சித்தார். கடந்த சில காலமாக சோனாலியை போதைப்பொருளுக்கு உட்படுத்த சுதிர் முயற்சித்து வந்தார்.
சுதிர் பால் சங்வான் ஜின்ட் பகுதியை சேர்ந்தவர் மற்றும் அவரது மனைவியுடன் சுமூகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. சங்வான் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட நபர்.ஆனால் அவர் தன்னை ஒரு வெளிநாடுவாழ் தொழிலதிபர் என்று எங்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
சுதிர் பால் சங்வானை தன்னுடைய பண்ணை வீட்டை விட்டு வெளியேற சோனாலி சொன்னார், ஆனால் அவன் சோனாலியை சமாதானப்படுத்தினான்.சோனாலியின் குருகிராம் பண்ணை வீட்டை சுதிர் சங்வான் கைப்பற்றி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டான்.
சோனாலியுடன் பணியாற்றிய பெரும்பாலான ஊழியர்களை சங்வான் நீக்கிவிட்டு தனது ஆட்களை நியமித்தார். பண்ணை வீட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த சிவம், ஆவணங்கள் மற்றும் மடிக்கணினியை திருடிவிட்டு தப்பியோடி உள்ளார்.
சோனாலியின் கோவா பயணம் குறித்து குடும்பத்தினருக்குத் தெரியாது. சோனாலியின் அதிகாரப்பூர்வ பாதுகாவலரை குருகிராமில் உள்ள குடியிருப்பில் இருக்கும்படி சொல்லிவிட்டு அவர்கள் தனியாக கோவா சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடும்படி கோவா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரியானா முதல் மந்திரரி மனோகர்லால் கட்டார் கூறியிருந்தார். இந்த நிலையில், தேவைப்பட்டால் சோனாலி போகத் மரண வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
சோனாலியின் மரணம் பற்றிய ரகசிய அறிக்கை அரியானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. கோவா டிஜிபி ஜஸ்பால் சிங், இந்த வழக்கு தொடர்பாக கோவா முதல் மந்திரி சாவந்திடம் ஐந்து பக்க அறிக்கையை அளித்திருந்தார்.
இந்த வழக்கில், போதைப்பொருள் சப்ளை செய்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் விற்பனையாளரையும், வடக்கு கோவா உணவக உரிமையாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.