வீட்டுக் காவலில் திடீர் சோனம் வாங்சுக்; என்ன காரணம்?

அமைதியான போராட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என சோனம் வாங்சுக் கூறியுள்ளார்.

வீட்டுக் காவலில்  திடீர் சோனம் வாங்சுக்; என்ன காரணம்?
Published on: 

ஜம்மு,

லடாக்கில் குளிர்கால உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

லடாக்கில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தில் இந்த தேர்தலை நடத்த அங்குள்ள அரசியல் கட்சிகளும், லடாக் மாநில உரிமைகளுக்காக போராடி வரும் சோனம் வாங்சுக் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த வார தொடக்கத்தில் இதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து லேவில் ஆர்பாட்டங்களோ போராட்டங்களோ நடத்த முடியாத வண்ணம் சோனம் லே பகுதிக்குள் நடமாட 60 நாட்கள் தடை விதித்து லே மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் பிறப்பித்தார்.

சோனம் வாங்சுக் போராட்டத்தால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் என்று போலீசார் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் லே பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே டஜன் கணக்கான ஆயுதமேந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சோனம் வாங்சுக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில்,

"நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்... டஜன் கணக்கான ஆயுதமேந்திய காவலர்கள் என் வீட்டைச் சூழ்ந்துள்ளனர். அரசாங்கமோ 'வீட்டிலேயே இருக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று கூறுகிறது.

கடந்த ஆண்டு லேயில் நடந்த கொலைகள் குறித்த நீதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஏன் தாமதப்படுத்தப்படுகிறது.

குளிர்காலத்தின் நடுவில் ராக்கெட் வேகத்தில் ஒரு போலியான உள்ளூராட்சி தேர்தல் மக்கள் மீது ஏன் திணிக்கப்படுகிறது என்பது போன்ற சங்கடமான கேள்விகளைக் கேட்டதற்காகத்தான் இவையெல்லாம் நடக்கின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் இவ்வாறு நடப்பது வேதனை" என தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதியான போராட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் சோனம் வாங்சுக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கைக்கு எதிராக மாநில ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டை நாட போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையின் பாதுகாப்பு கோரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று லேயில் நடைபெற்ற போராட்டங்களின் போது பொதுமக்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான நீதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாமதமாவது குறித்தே வாங்சுக் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் லடாக் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

முன்னதாக லடாக்கில் சோனம் வாங்சுக் உடைய 'டெசர்ட் பிளவர் பள்ளி' அனுமதியின்றி தொடங்கப்பட்டதாக கூறி தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X