

புதுடெல்லி,
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்து வந்தார். 21-வது நாளாக அவர் உண்ணா விரதம் இருந்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள உண்ணாவிரதப் பந்தலில் இருந்து சோனம் வாங்சுக்கை இன்று காலையில் போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலும், ஐகோர்ட்டு உத்தரவின்படியும், அவர் அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். இங்குள்ள யாரும் பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் இன்னும் பெரிதாக வளரும். சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்தி அவர்கள் மிகப்பெரிய தவறை செய்துள்ளனர். எல்லோரும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு திரும்புங்கள். நமது இயக்கம் இங்கிருந்து வளரட்டும், ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பயணம் திட்டமிட்டபடி நடக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.