சோனியாவும், மேனகாவும் வாழ்த்துகளை பரிமாறிய அபூர்வம் - தமிழக எம்.பி.க்களால் அதிர்ந்தது நாடாளுமன்றம்

தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்று முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்ற மக்களவை அதிர்ந்தது. சோனியாவும், மேனகாவும் வாழ்த்துகளை பரிமாறிய அபூர்வ காட்சியும் அரங்கேறியது.
சோனியாவும், மேனகாவும் வாழ்த்துகளை பரிமாறிய அபூர்வம் - தமிழக எம்.பி.க்களால் அதிர்ந்தது நாடாளுமன்றம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூடியது. மக்களவையில் புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளத்தொடங்கினர். முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

2-வது நாளான நேற்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பது தொடர்ந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியும், அவரைத் தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரியும் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான மேனகா காந்தியும் எம்.பி. பதவி ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டது அபூர்வ நிகழ்வாக அமைந்தது.

நடிகை ஹேமமாலினி, சாமியார் சாக்ஷி மகராஜ், நடிகர் சன்னி தியோல் உள்ளிட்டவர்களும் பதவி ஏற்றவர்களில் அடங்குவர்.

உடல் நலமில்லாது இருக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், சிறப்பு அனுமதியுடன் இருக்கையில் இருந்தவாறே பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழக தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் எம்.பி.க்கள் வசந்தகுமார், கார்த்தி ப.சிதம்பரம், கரூர் ஜோதிமணி உள்ளிட்டோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி.யான தேனி ரவீந்திரநாத் குமாரும் பதவி ஏற்றவர்களில் அடங்குவார்.

இவர்கள் தமிழில் பதவி ஏற்றது, தமிழ் கூறும் நல்லுலகில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

முழக்கங்கள்

தி.மு.க. எம்.பி.க்கள் பலரும் தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க என முழங்கினர்.

தேனி அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என கூறியது மாறுபட்டதாக அமைந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதவி ஏற்றபின்னர் வாழ்க அம்பேத்கர், பெரியார் என முழங்கினார்.

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. பி.ஆர். நடராஜன் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என கோஷமிட்டார்.

பாரிவேந்தர் தமிழ் வாழ்க, இந்தியா வாழ்க என முழங்கினார்.

தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்றபோது கரவொலியாலும் சபை கலகலப்பானது.

சபாநாயகர் ஆகப்போகிற ஓம் பிர்லா எம்.பி.யாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோதும் கைதட்டல் அதிர்ந்தது.

பெரும்பாலான பா.ஜனதா எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டபோது பாரத மாதாவுக்கு ஜே என கோஷமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com