4 நாள் பயணமாக சிம்லா சென்றார் சோனியா காந்தி

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 4 நாள் பயணமாக சிம்லா சென்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சிம்லா,

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளுமான பிரியங்கா காந்தி, இமாசலபிரதேச தலைநகர் சிம்லா அருகே உள்ள சாரபாராவில் ஒரு காட்டேஜ் கட்டியுள்ளார். இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில், 4 அறைகள் கொண்ட இந்த அழகிய காட்டேஜ் அமைந்திருக்கிறது.

இந்நிலையில் சோனியா காந்தி நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சண்டிகார் சென்றார். அங்கிருந்து காரில் சிம்லா சென்றடைந்தார். சோனியா காந்தியுடன் அவரது பாதுகாப்பு படையினரும் சென்றனர்.

ஏற்கனவே பிரியங்கா காந்தி தனது கணவர், குழந்தைகளுடன் ஒரு வாரத்துக்கு முன்பு சிம்லா காட்டேஜுக்கு சென்று தங்கியுள்ளார். பஞ்சாப் புதிய முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னியின் பதவியேற்பு விழாவில் நேற்று பங்கேற்ற ராகுல் காந்தியும், சண்டிகாரில் இருந்து சிம்லா சென்று தாய், சகோதரியுடன் இணைந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

ஆக, இவர்கள் குடும்பமாக பிரியங்கா காந்தியின் காட்டேஜில் தங்கியிருக்கப் போகிறார்கள். அப்போது கட்சியினர் யாரையும் சந்திக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் உள்கட்சிப் பூசல் தலைவலி போன்றவற்றுக்குப் பின் சில நாட்களை அமைதியாக கழிக்கத் திட்டமிட்டு சோனியா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் சிம்லா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com