பால் தாக்கரேவை நான் சந்தித்ததால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்தார்: பிரணாப் முகர்ஜி

பால் தாக்கரேவை நான் சந்தித்ததால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பால் தாக்கரேவை நான் சந்தித்ததால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்தார்: பிரணாப் முகர்ஜி
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட்ட போது, பால் தாக்கரேவை சந்தித்து ஆதரவு கோரியதால் சோனியா காந்தி என் மீது அதிருப்தி அடைந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் மேற்கண்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேலும் கூறியிருப்பதாவது:- கடந்த 2012 ஜனாதிபதி தேர்தலின்போது சிவசேனா தலைவர் பால் தாக்கரே எனக்கு ஆதரவு அளித்தார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் மும்பை சென்றேன். பாஜக கூட்டணியை சேர்ந்த பால் தாக்கரேவை நான் சந்திப்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பவில்லை.

அதேநேரம் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரை சந்திக்குமாறு என்னை அறிவுறுத்தினார். இறுதியில் பால் தாக்கரேவை சந்திக்க முடிவு செய்தேன். காங்கிரஸ் தலைவர்களில் நான் வேறுபட்டவன் என்பதால் ஆதரவு அளித்ததாக பால் தாக்கரே கூறினார்.

அடுத்த நாள் காலை கிரிஜா வியாஸ் என்னை தொடர்பு கொண்டு சோனியா காந்தியும் அவரது அரசியல் ஆலோசகர் அகமது படேலும் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தார்.அப்போது எனது நிலையை தெளிவுபடுத்தினேன். ஏற்கெனவே மம்தா பானர்ஜி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். பவாரும் கூட்டணியை உதறினால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். எனவே பவாரின் விருப்பத்துக்காகவே தாக்கரேவை சந்தித்தேன் என்று விளக்கமளித்தேன். எனினும் இந்த விவகாரம் குறித்து சோனியாவிடமோ, அகமது படேலிடமோ பேசக்கூடாது என்று நான் முடிவு செய்துவிட்டேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com