

புதுடெல்லி,
சோனியா காந்தியின் புத்தகத்தை இந்தியாவில் வெளியிடபோவதில்லை என பெங்குயின் நிறுவனம் அறிவித்துள்ளது.
'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லவ்' (Belonging: A Journey of Love) என்ற 544 பக்க சுயசரிதை புத்தகத்தை சோனியா காந்தி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரிவான ஆல்பிரட் ஏ நோப் பதிப்பகம் வெளியிடவிருந்தது.
இந்த புத்தகத்தில் இத்தாலியில் சோனியா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை குறித்தும், அதன்பிறகு 19-ஆவது வயதில் இங்கிலாந்தில் வைத்து ராஜீவ் காந்தியை காதலித்தது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு வந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளாக மாறியது குறித்தும் எழுதப்பட்டுள்ளது.
மேலும், இந்திரா காந்தியிடம் சோனியா காந்தி முதன்முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது முதல், இந்தி கற்க எடுத்து கொண்ட முயற்சிகள், சேலை அணிவது குறித்தும், இந்திரா காந்தி படுகொலையை அடுத்து ராஜீவ் பிரதமரானது, பிறகு ராஜீவ் படுகொலையை தொடர்ந்து, சோனியா காந்தி விருப்பமின்றி அரசியலுக்கு வந்தது குறித்தும் நினைவுகூரப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை வரும் நவம்பர் மாதம் 10-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக ஆல்பிரட் ஏ நோப் பதிப்பகம் ஏற்கெனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில், புத்தகத்தில் சில மாற்றங்களையும், சில பகுதிகளை நீக்கவும் பதிப்பகம் கேட்டுக் கொண்டதாகவும், அதனை சோனியா காந்தி மறுப்பு தெரிவித்ததாகவும் புத்தக வெளியீட்டிலிருந்து அந்நிறுவனம் விலகிக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், சோனியா காந்தியின் புத்தகத்தை இந்தியாவில் வெளியிடபோதில்லை எனவும் தாங்கள் அதன் பதிப்பாளர் அல்ல என பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், திட்டமிட்டபடி நவம்பர் 10 ஆம் தேதி சோனியா காந்தியின் 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.