விரைவில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ‘சிப்’ பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் அறிமுகம் - மத்திய அரசு நடவடிக்கை

விரைவில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ‘சிப்’ பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் அறிமுகம் - மத்திய அரசு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் பாஸ்போர்ட்டை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளிதரன் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஆமாம், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ-பாஸ்போர்ட்டுகளை (மின்னணு பாஸ்போர்ட்டுகளை) அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சிப் பொருத்தப்பட்டிருக்கும்.

பாஸ்போர்ட்தாரரின் தனிப்பட்ட தகவல்கள், இந்த சிப்பில் டிஜிட்டலில் எழுதப்பட்டு, சேமிக்கப்பட்டிருக்கும்.

இ-பாஸ்போர்ட்டுகளை தயாரிப்பதற்காக, மின்னணு தொடர்பில்லாத பொறிப்புகள் (எலெக்டிரானிக் காண்டக்ட்லஸ் இன்லேஸ்) கொள்முதல் செய்வதற்கு நாசிக்கில் (மராட்டியம்) உள்ள இந்திய செக்யூரிட்டி அச்சகத்துக்கு அரசு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.

இது தொடர்பாக சர்வதேச சிவில் விமான அமைப்புக்கு இணக்கமான மின்னணு தொடர்பு இல்லாத பொறிப்புகளை, அதன் செயல்பாட்டு முறையுடன் கொள்முதல் செய்வதற்கு நாசிக் செக்யூரிட்டி அச்சகம், உலகளவிலான 3 கட்ட டெண்டர் விடுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், மின்னணு பாஸ்போர்ட் தயாரிப்பு தொடங்கி விடும். யாரேனும் இந்த மின்னணு பாஸ்போர்ட் சிப்பை சேதப்படுத்தி விட்டால், அதை அடையாளம் கண்டு கொள்ள இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1 கோடி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளதரன் பதில் அளிக்கையில், ஆமாம், 2017-ம் ஆண்டு 1 கோடியே 8 லட்சம் பாஸ்போர்ட்டுகளும், 2018-ம் ஆண்டு 1 கோடியே 12 லட்சம் பாஸ்போர்ட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com