

அமராவதி,
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக அரசு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. இதையடுத்து நடந்த தேர்தலில் வெற்றியும் பெற்றது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி மத்திய அரசினை வலியுறுத்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு தலைமைசெயலகம் நோக்கி சைக்கிள் பேரணியாக சென்றார். அவருடன் கட்சி தொண்டர்களும் சென்றனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய படி சென்றனர். பின்னர் தெலுங்கு சேத கட்சி மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு, கடந்த பல நாட்களாக மாநிலங்களவையை பாஜக அரசு ஒத்திவைத்து வருகிறது. இனியும் மாநிலங்களவையை ஒத்தி வைத்தால் எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க வேண்டும்.
நாட்டில் ஆதிக்கத்தை செலுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வரும் பாஜக அரசை ஏற்கனவே ஆந்திர மக்கள் நிராகரித்து வரும் நிலையில், விரைவில் நாடு முழுவதும் ஒன்றிணைந்து பாஜக அரசை நிராகரிக்கும். மேலும் ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நிறைவேற்றும் வரையில் நாங்கள் போராட்டத்தினை பின் வாங்காமல் நடத்துவோம். கடந்த காலத்தில் சில உள்ளூர்வாசிகள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டனர். அது போலவே தற்போது ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியும் ஆளும் மத்திய அரசுடன் இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளது எனக் கூறினார்.