

காஷ்மீரில் இலவச டிஷ் டி.வி. வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தூர்தர்ஷன் காஷீர் என்ற செயற்கைக்கோள் சேனலுக்கான தீம் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இதில் டோக்ரியில் வெளியாகும் முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்பின் ஜவடேகர் பேசும்பொழுது, வருகிற ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டி இருக்க வேண்டும் என புதிய கனவொன்று உள்ளது. இந்தியாவில் 25 கோடி குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 18 கோடி தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன. இன்னும் 7 கோடி குடும்பத்தினர் தொலைக்காட்சி பெட்டிகளில்லாமல் உள்ளனர்.
இன்று இலவச டிஷ் டி.வி.க்கான செட் டாப் பாக்ஸ்களை வழங்கி ஒரு சிறிய தொடக்கத்தினை உருவாக்கி உள்ளோம். எனினும், நமது பொருளாதாரம் வளர்ந்த பின், அடிப்படை தேவைகளான உணவு, துணி, இருப்பிடம், சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான விசயங்கள் ஆகியவை கிடைத்தபின் நம்முடைய மக்கள் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்குவார்கள் என கூறியுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டி வந்து விட்டால் இந்தியா உலகின் மிக பெரிய நாடாகி விடும் என மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார்.