

புதுடெல்லி
தென்கொரியாவின் ஜனாதிபதியாக கடந்த 2025-ம் ஆண்டு பொறுப்பேற்று கொண்ட லீ ஜே மியுங் இந்தியாவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்று புதுடெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். 8 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த முதல் ஜனாதிபதி என்ற வகையில், அவருடைய வருகை பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தில், கப்பல் கட்டுதல் உள்ளிட்ட இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை இடம் பெறும் என தகவல் வெளியானது. அவர், பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேசினார். ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் டெல்லியில், பிரதமர் மோடி மற்றும் லீ ஜே மியுங் இருவரும் ஒன்றாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, போராட்டம், சேவை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கொண்ட தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கின் வாழ்க்கையானது ஓர் உந்துதலுக்கான எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை தந்துள்ள அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு சவாலும், மக்களுக்கு சேவையாற்றும் அவருடைய மனவுறுதியை வலுப்படுத்த மட்டுமே செய்தது என மியுங்கை பாராட்டி பேசினார்.
நம் இரு நாடுகளின் மரபணுக்களிலும் ஜனநாயக மதிப்புகள், சந்தை பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் விதியில் மதிப்பு கொள்ளுதல் ஆகியவை பொதிந்து உள்ளன என்றார்.
தென்கொரிய ஜனாதிபதியின் இந்த பயணத்தில், சிப்புகள் முதல் கப்பல்கள் வரை, திறமை முதல் தொழில் நுட்பம் வரை, சுற்றுச்சூழல் முதல் எரிசக்தி வரை என ஒவ்வொரு துறையிலும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை நாம் ஏற்படுத்துவோம். இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றை ஒன்றிணைந்து உறுதிப்படுத்துவோம் என்று பேசினார்.
இந்தியா மற்றும் தென்கொரியா இடையேயான இருதரப்பு வர்த்தகம் ரூ.2.51 லட்சம் கோடியாக தற்போது உள்ளது. இதனை 2030-ம் ஆண்டில் ரூ.4.65 லட்சம் கோடியாக அதிகரிக்க செய்வதற்கான பல்வேறு முக்கிய முடிவுகளை நாங்கள் இன்று எடுத்திருக்கிறோம் என்றார். வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த, தொழில் ஒத்துழைப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளோம் என்றும் அவர் பேசியுள்ளார்.