

சென்னை,
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மறைவு நமது கலாச்சார வாழ்க்கைக்கு பெரும் இழப்பு. துயரமடைந்த குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.