போலீஸ் நிலைய வளாகத்தில் பா.ஜ.க. நகரசபை தலைவர் வேட்பாளரின் கணவர் மீது தாக்குதல் - சமாஜ்வாடி எம்.எல்.ஏ. மீது புகார்

போலீஸ் நிலைய வளாகத்தில் பா.ஜ.க. நகரசபை தலைவர் வேட்பாளரின் கணவரை தாக்கியதாக சமாஜ்வாடி எம்.எல்.ஏ. மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அமேதி,

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் ராகேஷ் சிங். இவர் தீபக் சிங் என்பவரை அடிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் பரவியது. இது தொடர்பாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தீபக் சிங்கின் மனைவி ராஸ்மி சிங், நகரசபை தலைவர் தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பா.ஜ.க.- சமாஜ்வாடி கட்சியினர் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தீபக் சிங், தங்கள் கட்சி தொண்டர்கள் 2 பேரை தாக்கியதாக ராகேஷ் சிங் எம்.எல்.ஏ. தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் எம்.எல்.ஏ. உயர் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார். அதுகுறித்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே இது தொடர்பாக எம்.எல்.ஏ. மற்றும் சமாஜ்வாடி தொண்டர்கள் நேற்று முன்தினம் இரவில் போலீஸ் நிலையத்தில் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த தீபக்சிங்கை, எம்.எல்.ஏ. ராகேஷ் சிங், அடித்து தாக்கி உள்ளார்.

இதுகுறித்து தீபக் சிங், போலீசில் புகார் அளித்தார். எம்.எல்.ஏ.வின் ஆட்கள், தன் மீது கல்வீசியதாகவும், தாக்கியதாகவும் கூறி உள்ளார். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அமேதி தொகுதி எம்.பி. ஸ்மிருதி இரானி ஆகியோரிடமும் முறையிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com