எஸ்.பி.வேலுமணி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
Published on

புதுடெல்லி,

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக கடந்த நவம்பர் 30-ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பு அளித்தது. மேலும் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கபட்டால், குற்றப்பத்திரிகையில் அவரை சேர்க்கலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com