

புதுடெல்லி,
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 5 ஆம் தேதி துவங்கியது. மக்களவை கூடியதில் இருந்தே ஏதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பிக்களும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும் முடங்கியுள்ளன. மக்களவை முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று பல்வேறு அரசியல் கட்சிகளைசேர்ந்த தலைவர்களை சந்தித்தார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ், பிஜேடி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் கூறுகின்றன.
தொடர்ந்து மக்களவை முடங்கினால், அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச சுமூக தீர்வு எட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமாரையும் சபாநாயகர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.