புதுச்சேரி சட்டசபையில் விஜய் படத்தை காட்டி உறுதிமொழி ஏற்ற தவெக எம்.எல்.ஏ. - சபாநாயகர் எதிர்ப்பு

புதுச்சேரி சட்டசபையில் 28 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
புதுச்சேரி சட்டசபையில் விஜய் படத்தை காட்டி உறுதிமொழி ஏற்ற தவெக எம்.எல்.ஏ. - சபாநாயகர் எதிர்ப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதியிலும் என மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

இதனையடுத்து கடந்த 13-ந் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் பா.ஜனதா கட்சியை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு 15 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று நடந்தது. தற்காலிக சபாநாயகர் அன்பழகன் திருக்குறள் வாசித்து சட்டசபை நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி உள்பட 28 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

சட்டசபையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ராமு எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்புக்கான உறுதி மொழியை ராமு வாசித்தபோது 'என்னுடைய கடவுள் மீது ஆணை' எனக்கூறி தனது சட்டைபையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் படத்தை எடுத்து காண்பித்தார். இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், உறுதிமொழியில் இருப்பதை மட்டும்தான் படிக்க வேண்டும் என்று கூறினார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம், நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்ட ராமு (மணவெளி), சாய்.சரவணன்குமார் (திருபுவனை) ஆகியோர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com