

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, இந்த மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான பெரும்பான்மை பலம் தங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு நம்புவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனுடன் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்திருத்தங்களையும் மத்திய அரசு கொண்டுவர முயற்சித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் தொடர்புடைய அரசியலமைப்புத் திருத்த மசோதா மக்களவையில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது.
அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அப்போது தேவையான பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில், தற்போது ஆதரவைத் திரட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது
இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான ஆதரவைப் பெறுவதற்காக, தி.மு.க. மற்றும் சில சிறிய கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடனான உறவில் ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து, தி.மு.க.வின் ஆதரவைப் பெற மத்திய அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்சிகளின் ஆதரவு நிலவரத்தை கணக்கிட்டு, சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதியை முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மாதம் 26 மற்றும் 27-ந்தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதிகள் முடிவு செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்பாக உறுப்பினர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.எனினும், சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.