

ஜம்மு,
காஷ்மீரில் பயங்கரவாத குற்றங்கள் மற்றும் அவை தொடர்புடைய குற்றங்களை விசாரித்து, வழக்கு நடத்த மாநில விசாரணை முகமை (எஸ்.ஐ.ஏ.) என்ற சிறப்பு பிரிவை உருவாக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்புக்கும், இதர மத்திய விசாரணை அமைப்புகளுக்கும் துணையாக இருக்கும். விரைவான விசாரணைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநில விசாரணை முகமையில் ஒரு இயக்குனரும், இதர அதிகாரிகளும், ஊழியர்களும் இடம்பெறுவார்கள். காஷ்மீரில் உள்ள சி.ஐ.டி. பிரிவு போலீஸ் நிலையங்கள், இனிமேல் சிறப்பு விசாரணை முகமையின் போலீஸ் நிலையங்களாக செயல்படும். வழக்கு பதிவு செய்தல், விசாரணை நடத்துதல் போன்றவை அங்கு மேற்கொள்ளப்படும்.
பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களை பதிவு செய்தால், அதுகுறித்து சிறப்பு புலனாய்வு முகமைக்கு தகவல் தெரிவிப்பது அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உபா சட்டம், வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் இழைக்கப்படும் குற்றங்களை விசாரிக்க இந்த அமைப்புக்கு உரிமை உள்ளது.