

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் வனப்பகுதியில் சந்தன மரங்கள் உள்ளன. இங்குள்ள சுமார் 2 ஆயிரம் சந்தன மரங்கள் 'ஸ்பைக்' என்னும் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஸ்பைக் நோய் பாதிப்பால் சந்தன மரங்கள் 4 ஆண்டுகளில் காய்ந்து அழிந்துவிடும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் கேரள மாநில வனத்துறை மந்திரி சுசீந்திரன் இன்று மறையூர் வனப்பகுதியில் உள்ள சந்தன மரங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அவரிடம் வனத்துறை அதிகாரிகள் ஸ்பைக் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான மரங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை மந்திரி சுசீந்திரன், ஆரோக்கியமான நிலையில் உள்ள மற்ற சந்தன மரங்களுக்கும் நோய் பரவாமல் தடுக்கும் வகையில், 'ஸ்பைக்' நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் சந்தன மரங்களை வேரோடு அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.