

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதன்படி, கடந்த மே 1-ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முறையான அனுமதி கிடைத்ததையடுத்து, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பெற பல்வேறு மாநிலங்களும் ஆர்வம் காட்டுகின்றன.
இந்த நிலையில், வரும் ஜுன் 20 ஆம் தேதிக்குப் பிறகு டெல்லியில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கிடைக்கும் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுப்பு ஜூன் 20-க்குப் பிறகு தில்லி வரவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தார். இது குறித்து கெஜ்ரிவால் மேலும் கூறுகையில்,
தடுப்பூசி மூலம் மட்டுமே கொரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தொகுப்பு ஜூன் 20-க்குப் பிறகு சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தடுப்பூசியின் தயாரிப்பு ஆகஸ்டில் தொடங்கவுள்ளது. இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசியின் ஒரு பகுதி டெல்லிக்கு வழங்கப்பட உள்ளது என்றார்