

உதய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், 6 வாரங்களில் சுமார் 20 பேரை 'வெறிப்பிடித்த' அணில் ஒன்று கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உதய்பூரில் உள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனமான மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் (MLSU) உள்ள சைக்காலஜி துறைக்கு செல்லும் வழியில் பதுங்கியிருக்கும் இந்த அணில், எந்த தூண்டுதலும் இல்லாமல் அவ்வழியே செல்பவர்களை கடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு வாரங்களில், துறைத் தலைவர் உட்பட 18 முதல் 20 பேரை அந்த அணில் கடித்ததால், அப்பல்கலைக்கழக பகுதி பீதியை சந்தித்துள்ளது. அந்த பாதையைப் பயன்படுத்த மாணவர்களும் ஆசிரியர்களும் இப்போது தயங்குகின்றனர்.
அந்த் அணில் அந்த பகுதியில் கூடு கட்டியிருப்பதாகவும், ஊடுருவ முயற்சிப்பவர்கள் என்று கருதும் எவரிடமிருந்தும் தனது எல்லையை ஆக்ரோஷமாகப் பாதுகாத்து வருவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது கூண்டுகள் வைத்து அந்த வெறிபிடித்த அணிலை பிடிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கல்லூரியின் இணை முதல்வர் நவீன் நவனா கூறுகையில், “அணில் கடி குறித்த புகார்கள் வரத் தொடங்கியதிலிருந்து, நாங்கள் இரண்டு முறை மீட்புக் குழுவை வரவழைத்துள்ளோம். வெவ்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன, ஆனால் அந்த தந்திரமான அணில் ஒவ்வொரு முயற்சியையும் மீறி ஒவ்வொரு முறையும் தப்பித்துவிட்டது. இதன் விளைவாக, அணில் தென்படும்போதெல்லாம் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.