தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: மத்திய அரசு கடும் கண்டனம்


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: மத்திய அரசு கடும் கண்டனம்
x
தினத்தந்தி 28 Jan 2025 3:22 PM IST (Updated: 29 Jan 2025 5:25 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் காரைக்காலில் இருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 13 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து வந்த இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு எச்சரித்திருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி சூடு நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை வரவழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்படி எந்த சூழலிலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் காயமடைந்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் நேரில் சந்தித்து துப்பாக்கிச்சூடு பற்றி கேட்டறிந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story