

புதுடெல்லி,
தமிழக சட்டசபையில் கடந்த 18-ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது தி.மு.க சார்பில் ரசகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து சட்டசபையில் மோதல்-அமளி ஏற்பட்டது. தி.மு.கவினர் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நம்பிக்கை தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க கோரியும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரியும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்து ஏற் கனவே மனு கொடுத்தார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு அளிக்க மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றார். நேற்று மாலை அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.
அவருடன் தி.மு.க முதன்மை செயலாளர் துரை முருகன், தி.மு.க எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, திருச்சி சிவா ஆகியோரும் சென்றிருந்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்ய கொரியும், புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியும் ஜனாதிபதியிடம் மனு அளித்தார்.
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி அவர்களிடம் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது. அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. சோனியாவின் உடல் நிலை குறித்து விசாரித்தேன் அவர்களும் தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.