

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக எலான் மஸ்க் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய தொழிலதிபர்கள் சுயநலன்களுக்காக ஸ்டார்லிங் சேவையை முடக்குவதாகவும் விமர்சித்து இருந்தார். இன்னும் ஒரு படிமேலே சென்று முகேஷ் அம்பானியை நேரடியாக விமர்சித்து இருந்தார்.
எலான் மஸ்க்கின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியதாவது: பாதுகாப்பு விதிகளில் சமரசமில்லை. இந்தியா ஒரு ஆரோக்கியமான, இறையாண்மை கொண்ட ஜனநாயகம். சமூகவலைதள அழுத்தங்களுக்குப் பணிந்து அது தனது பாதுகாப்புக் கொள்கையை மாற்றிக்கொள்ளாது.
நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நாங்கள் நடத்திய ஆய்வுகளில், ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள் நிறுவனங்களால் நாட்டின் பாதுகாப்பு முகமைகள், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏழைகளுக்குக் குறைந்த விலையில் இணையவசதியை எலான் மஸ்க் முதலில் வழங்க வேண்டும். இந்தியாவை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வளைக்க முடியாது” என்றார்.