ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ஓடிபி - வரும் ஜன.1 ஆம் தேதி முதல் அமல்படுத்துகிறது எஸ்.பி.ஐ.

ஏ.டி.எம்.களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், எஸ்.பி.ஐ. வங்கி புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ஓடிபி - வரும் ஜன.1 ஆம் தேதி முதல் அமல்படுத்துகிறது எஸ்.பி.ஐ.
Published on

புதுடெல்லி,

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் புதிய வசதியை வரும் 2020- ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்துகிறது. இதன்படி, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை, எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் போது, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி (ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) வரும். இந்த ஓடிபி எண்ணை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும். ரூ.10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த புதிய நடைமுறை பொருந்தும்.

ஏ.டி.எம்.கள் மூலமாக பணம் எடுக்கும் முறையில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக எஸ்.பி.ஐ. தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்கள், வேறு வங்கி ஏ.டி.எம் மூலமாக பணம் எடுக்கும் போது, பழைய முறையே தொடரும். ஏனெனில், என்.எப்.எஸ். முறையில் இது இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஏ.டி.எம். கார்டுகள் இல்லாமலே பணம் எடுக்கும் யோனோ கேஷ் என்ற வசதியை, எஸ்.பி.ஐ. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com