ரூ. 10-க்கு பசுவின் கோமியத்தை வாங்கும் மாநிலம் எது தெரியுமா?

கோமியத்துடன் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டு இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்பட உள்ளன.
ரூ. 10-க்கு பசுவின் கோமியத்தை வாங்கும் மாநிலம்
பசுவின் கோமியம்
Published on

லக்னோ,

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, விவசாயிகளிடம் இருந்து பசு கோமியத்தை லிட்டருக்கு ரூ.10-க்கு வாங்கும் புதிய சோதனை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இயற்கை விவசாயம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் ஒன்றை அம்மாநில அரசு தற்போது கையில் எடுத்துள்ளது.

15 கிராமங்கள்

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, விவசாயிகளிடம் இருந்து பசு கோமியத்தை லிட்டருக்கு ரூ.10-க்கு வாங்கும் புதிய சோதனைத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக புலாந்த்சகர் மாவட்டத்தில் உள்ள சியானா வட்டத்திற்குட்பட்ட நர்சேனா பகுதியில் சுமார் 15 கிராமங்களில் இத்திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

பசு கோமியம் 10 ரூபாய்

மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாயத்தில் இதை ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்த இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற குடும்பங்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் பசு கோமியம் 10 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

பெண்களுக்கு வேலை வாய்ப்பு

சுமார் 300 கிராமப்புற பெண்கள் பங்கேற்கும் இத்திட்டத்தில், சேகரிக்கப்படும் கோமியத்துடன் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டு இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் பால் தராத வயதான மாடுகளை வைத்துள்ள கால்நடை வளர்ப்போருக்கும் கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி

சுமார் 300 கிராமப்புறப் பெண்கள் பங்கேற்கும் இத்திட்டத்தில், கோமியத்தை சேகரித்து வழங்கும் சேமிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு 2 ரூபாய் கமிஷன் வழங்கப்படுகிறது. இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், அடுத்தகட்டமாக புதிய கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு

இந்த நிலையில், பா.ஜனதா அரசின் இந்த கோமியம் கொள்முதல் திட்டத்திற்கு எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது ஒரு பெரிய ஊழல் என்றும் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தலுக்குப்பணம்

உத்தரப் பிரதேச பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள இந்த பசு கோமியம் கொள்முதல் திட்டம் என்பது முற்றிலும் மக்களை ஏமாற்றும் வேலையாகும். வரவிருக்கும் தேர்தலுக்குப்பணம் மற்றும் நிதி திரட்டுவதற்காக பா.ஜனதா அரசு நடத்தும் ஒரு திட்டமிட்ட மோசடி இதுவாகும். இயற்கை விவசாயம் என்ற போர்வையில் அரசு பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com