

கவுகாத்தி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகாய்.
இவர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அவர், அசாம் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்றமும், நீதிமன்றமும் ஒரு கட்டத்தில் நாட்டை கட்டி எழுப்புவதற்கு ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையின் காரணமாகத்தான் மாநிலங்களவை எம்.பி. பதவி நியமனத்தை நான் ஏற்றுக்கொண்டேன். நான் நாடாளுமன்றத்தில் இருந்தால், நீதித்துறையின் கருத்துகளை அங்கு எடுத்துக்கூற முடியும். நாடாளுமன்றத்தின் கருத்தை நீதித்துறையிடம் எடுத்து சொல்லவும் முடியும் என்று அவர் கூறினார்.
ஆனால் ரஞ்சன் கோகாயின் நியமனம், அரசியலமைப்பு சாசனத்தின் மீது விழுந்த மிக மோசமான, இதுவரை நடந்திராத, மன்னிக்க முடியாத அடி ஆகும்; இது நீதித்துறையின் சுதந்திரத்தை அடக்கிவிடும் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.
ரஞ்சன் கோகாயை மாநிலங் களவை எம்.பி.யாக நியமித்து இருப்பது நீதித்துறையின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் முயற்சி என்று இடதுசாரி கட்சிகள் கண்டித்துள்ளன.