சமையல் எண்ணெய் விலை குறைவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசு

சமையல் எண்ணெய் மீதான வரி குறைப்பின் முழு பலன்களும் பொதுமக்களுக்கு கிடைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமையல் எண்ணெய் விலை குறைவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசு
Published on

வரி குறைப்பு

நாடு முழுவதும் கடந்த ஓராண்டாக சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. பண்டிகை காலத்தையொட்டி, சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது.

2-வது தடவையாக, இம்மாதமும் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. அதன்பிறகும் சமையல் எண்ணெய் விலை குறையவில்லை. இதனால், அதை இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதனால், பதுக்கலை தடுத்து சமையல் எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்த்தது. கடுகு எண்ணெய் மீதான யூக வணிகத்தை தடை செய்துள்ளது.

ரைஸ் பிரான் எண்ணெய்

இந்தநிலையில், மத்திய உணவு மற்றும் பொது வினியோக செயலாளர் சுதன்சு பாண்டே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சமையல் எண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டதன் முழு பலன்களும் பொதுமக்களுக்கு கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால், சமையல் எண்ணெய் விலை குறையும்.

நெல் அதிகம் விளையும் பகுதிகளில், ரைஸ் பிரான் எண்ணெய் அதிக அளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருப்பு இறக்குமதி

மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், வெளிநாடுகளை விட இந்தியாவில் உணவு பொருட்களின் விலை குறைந்துள்ளது. பருப்பு விலையை கட்டுப்படுத்த அதன் இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com