

புதுடெல்லி,
இந்தியா முழுவதும் ஆங்காங்கே கடந்த ஆண்டு பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசும் பசு பாதுகாப்பு என மனிதர்கள் மீது நடத்தப்படும் கும்பல் தாக்குதலை ஏற்க முடியாது என்றது. ஆனால் எச்சரிக்கையையும் மீறி கும்பல் தாக்குதலானது நடந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுத்த நிறுத்த அரசுக்களுக்கு உத்தரவிடுமாறு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் பத்திரிக்கையாளார் தூஷார் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 6-ல் விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மாவட்டம் தோறும் உயர் அதிகாரியை சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்ய உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுக்கள் பின்பற்றவில்லை என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்குகள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கார் மற்றும் டிஒய் சந்திரசூட் அடங்கிய பெஞ்ச் முன் நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கும்பல் தாக்குதல் குற்றமாகும். யாரும் சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. இது சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையாகும் மற்றும் இதனை கண்காணிப்பது ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பாகும் என்றது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க வழிமுறையை உருவாக்க கோரிய வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையே முந்தைய உத்தரவை பின்பற்றாத ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுக்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முன்னெடுக்க கோரிய வழக்கில் அம்மாநிலங்கள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.