

புதுடெல்லி,
பிரதமர் மோடி நாட்டின் முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் காணொலி காட்சி வழியே இன்று ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த சூழலில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8.45 மணியளவில் உரையாற்றினார்.
அவர் பேசும்பொழுது, கொரோனா தொற்றின் 2வது அலையை நாம் சந்தித்து வருகிறோம். உங்களுடைய வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கொரோனா பாதிப்புகளால் தங்களது அன்புக்குரியோரை இழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்பொழுது, கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சில நகரங்களில், கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 2 தடுப்பூசிகளுடன் உலகின் மிக பெரிய தடுப்பூசி திட்டம் நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை 12 கோடி தடுப்பூசி டோசுகள் போடப்பட்டு உள்ளன. வருகிற மே 1ந்தேதி முதல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
தொழிலாளர்களை தங்களது மாநிலத்திலேயே தங்கும்படி ஒவ்வோர் அரசும் வலியுறுத்த வேண்டும். மாநிலங்கள் அளிக்கு இந்த நம்பிக்கை அவர்களுக்கு உதவும். அதனால், அவர்கள் தங்கும் நகரத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசி போட முடியும்.
ஊரடங்கை கடைசி வாய்ப்பாக மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்குவதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசும்பொழுது கேட்டு கொண்டார்.