படேல் சிலையைக்காண தினமும் 10 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு: அதிகாரிகள் தகவல்

படேல் சிலையைக்காண தினமும் 10 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
படேல் சிலையைக்காண தினமும் 10 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு: அதிகாரிகள் தகவல்
Published on

அகமதாபாத்,

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார்.

கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தவர். படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது.

குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது மோடி இந்த சிலைக்கான அடிக்கல்லை 2013-ம் ஆண்டு நாட்டினார். 5 வருடங்களுக்கு பிறகு இந்த சிலை முழுவடிவம் பெற்றுள்ளது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த சிலை, குஜராத்திற்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வருகை புரிய வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நினைவுச் சின்னமாக உள்ள, ஒற்றுமைக்கான சிலையை பார்வையிட தினமும் 10,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்தார் வல்லபாய் படேலின் சிலையை சுற்றி சத்பூரா மலைத் தொடரின் வசீகரிக்கும் அழகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இந்த சிலையின் உட்புறம் இரும்பு மனிதர் வாழ்வினை சித்தரிக்கும் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி அரங்கங்கள் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலையின் வெளிப்புறத்தை மட்டும் பார்வையிடுபவர்களுக்கான கட்டணம் ரூ.120(ஒரு நபருக்கு). கேலரியை பார்வையிடுபவர்களுக்கு ரூ.350 கட்டணம் ஆகும். நாளை முதல் சுற்றுலா பயணிகள் ஒற்றுமைக்கான சிலை'யை பார்வையிடலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com