ஒற்றுமையின் சிலையால்-முதலைகளுக்கு வந்த ஆபத்து

வல்லபாய் படேலின் சிலை அமைந்துள்ள பகுதியில் வாழும் முதலைகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் குஜராத் மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது
ஒற்றுமையின் சிலையால்-முதலைகளுக்கு வந்த ஆபத்து
Published on

குஜராத்,

குஜராத் மாநிலத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே கடந்த ஆண்டு, 182 மீட்டர் உயரம் கொண்ட வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன் மதிப்பு ரூ.3-ஆயிரம் கோடி ஆகும். இச்சிலை ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படுகிறது.

வல்லபாய் படேலின் சிலை அமைந்துள்ள பகுதியில் ஏராளமான முதலைகள் வாழ்ந்து வருகின்றன. இச்சிலையை காண நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு காரணமாக முதலைகளை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யும் வேலையில் மாநிலஅரசு இறங்கியுள்ளது.

இதற்காக பிரமாண்ட இரும்பு கூண்டுகள் தயார் செய்யப்பட்டு முதலைகள் சாலையின் வழியாக குஜராத்தின் மேற்கு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதுவரை 12க்கும் அதிகமான முதலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து பேசிய வனத்துறை அதிகாரி அனுராதா சஹு, ஒற்றுமை சிலையை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக முதலைகளை இடமாற்றம் செய்ய மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி முதலைகள இடமாற்றம் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்

இந்த இடத்தை விட்டு இடமாற்றம் செய்வது முதலைகளின் வாழ்வியலுக்கு எதிராகவும் அமையலாம். ஏனெனில் சிலை அமைந்துள்ள பகுதி முதலைகள் வாழ ஏதுவான பகுதியாகும். புதிய இடம், முதலைகளின் இனப்பெருக்கத்துக்கு தடையாக அமைய வாய்ப்பு உள்ளதாகவும் விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் முதலைகளை இடமாற்றம் செய்யாமல் வேறு ஏதாவது நடவடிக்கை எடுக்க மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com