ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு: உடனடியாக பதவிப் பறிப்பை திரும்ப பெற வேண்டும் - கே.சி.வேணுகோபால்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு: உடனடியாக பதவிப் பறிப்பை திரும்ப பெற வேண்டும் - கே.சி.வேணுகோபால்
Published on

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் மூலம் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "இதில் சபாநாயகர் தான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும் இப்போது சபாநாயகரின் முடிவை எதிர்பார்த்து நிற்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பதவிப் பறிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இதுதான் நமக்கு தேவை, இதுவே நாட்டுக்கும் தேவை. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகலை சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்குவார்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com