

ராய்ப்பூர்,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.
நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து, நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக என்கவுன்டர் போன்ற அதிரடி நடவடிக்கையை பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால், ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். அதேவேளை, பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் பஸ்டர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் வனப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, வனப்பகுதியில் நக்சலைட்டுகள் மண்ணில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி திடீரென வெடித்தது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அவரை மீட்ட சக பாதுகாப்புப்படை வீரர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.