தார்வார்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு

தாவணகெரே அருகே தார்வார்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தார்வார்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் மைசூரு-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி முதல் பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த ரெயிலுக்கு ஜவுளி தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தார்வாரில் இருந்து வந்தே பாரத் ரெயில் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது தாவணகெரே (மாவட்டம்) கலெக்டர் அலுவலகம் அருகே ஜி.எம்.ஐ.டி. வளாகம் பின்புறம் ரெயில் வந்த போது மர்மநபர்கள் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கியுள்ளனர்.

இந்த கல்வீச்சி சம்பவத்தில் ரெயிலின் சி-4 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. அதாவது ஜன்னலின் வெளிப்புற மேற்பரப்பில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதே வேளையில் அந்த ரெயில்சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த ரெயில் பெங்களூருவுக்கு வந்தடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குவது சட்டப்படி குற்றம். ரெயில்வே சட்டம் 153-வது பிரிவின் கீழ் ரெயில்வே சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார்.

ஏற்கனவே மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், தற்போது கர்நாடகத்திலும் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com