

போராட்டங்களில் வன்முறை
திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நேற்று முன்தினம் இஸ்லாமிய அமைப்பு மராட்டியத்தில் கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இதில் அமராவதி, நான்தெட், மாலேகாவ், வாஷிம், யவத்மால் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. அப்போது அந்த பகுதிகளில் கல்வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக அமராவதியில் திரிபுரா வன்முறைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அவரது அலுவலகம் முன் சுமார் 8 ஆயிரம் பேர் திரண்டனர். அப்போது சித்ரா சவுக், காட்டன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இந்தநிலையில் மாநிலத்தில் நேற்று முன்தினம் போராட்டங்களின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் 20 வழக்குகள் பதிவு செய்தனர். 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊரடங்கு உத்தரவு
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த கல்வீச்சு சம்பவத்தை கண்டித்து நேற்று ராஜ்கமல் சவுக் பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர். பலர் கையில் காவி கொடிகளை வைத்து இருந்தனர். அவர்கள் முந்தைய நாள் நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் சிலர் திடீரென அந்த பகுதியில் இருந்த கடைகள் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்த அரங்கேறிய வன்முறையை அடுத்து அமராவதியில் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் பிறப்பித்தார். பொதுமக்கள் மருத்துவ தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் கூறியுள்ளனர். இதேபோல 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வன்முறை பரவாமல் இருக்க அமராவதியில் இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது.
சிவசேனா குற்றச்சாட்டு
இந்தநிலையில் மாநில அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமராவதியில் வன்முறை தூண்டிவிடப்பட்டுள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், திரிபுராவில் சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் தீ வைத்து எரிக்கப்படவில்லை என அந்த மாநில அரசு, போலீசார் விளக்கம் அளித்து உள்ளனர். எனவே இரு சமூகத்தினரும் அமைதியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.