டுவிட்டருடன் சண்டையிடுவதை நிறுத்தி விட்டு தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்துங்கள் - நவாப் மாலிக்

டுவிட்டருடன் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்துங்கள் என மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் வலியுறுத்தி உள்ளார்.
டுவிட்டருடன் சண்டையிடுவதை நிறுத்தி விட்டு தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்துங்கள் - நவாப் மாலிக்
Published on

மும்பை,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் பிரபலங்களை அடையாளப்படுத்த பயன்படுத்திவரும் நீல நிற டிக் குறியீட்டை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிகாரிகள் டுவிட்டர் நிறுவனத்தை தொடர்புகொண்டு எடுத்துரைத்தனர்.

இதையடுத்து வெங்கையா நாயுடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் அந்த நீல நிற டிக் மீண்டும் இணைக்கப்பட்டது. 6 மாதங்களாக டுவிட்டர் கணக்கை பயன்படுத்தாமல் இருந்ததால் இந்த டிக் நீக்கப்பட்டதாக டுவிட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் நிருபர்களிடம் கூறியதாவது:-

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தனிப்பட்ட கணக்குகளில் இருந்து நீல நிற டிக் நீக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக பா.ஜனதாவும், மத்திய அரசும் டுவிட்டருடன் சண்டையிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில், நாட்டின் குடிமக்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

நீல நிற டிக் பிரச்சினை அல்லது தடுப்பூசி பிரச்சினையில் மத்திய அரசு விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இந்த விமர்சனங்களை புறக்கணித்துவிட்டு மத்திய அரசு ஆணவத்துடன் நடந்து கொள்கிறது.

டுவிட்டரில் நீல நிற டிக் பெற சண்டையிடுவதை விட குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் பா.ஜனதா அதிக கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com