மணிசங்கர் அய்யர் நீக்கம் : விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும் அருண் ஜெட்லி விமர்சனம்

மணிசங்கர் அய்யரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவது என்பதை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மணிசங்கர் அய்யர் நீக்கம் : விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும் அருண் ஜெட்லி விமர்சனம்
Published on

புதுடெல்லி

பிரதமர் நரேந்திரமோடி, நேற்று டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறந்து வைத்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் அவர் விமர்சித்தார்.

அவர் பேசுகையில் ஓட்டுக்காக அம்பேத்கர் பெயரை பயன்படுத்தும் சில கட்சிகள், தேசத்தை கட்டமைத்ததில் அவர் ஆற்றிய பங்கை மறைக்க முயல்கின்றன. இந்த முயற்சியில் ஈடுபடும் குடும்பத்தை காட்டிலும், அம்பேத்கரின் சிந்தனைகள்தான் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளன. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், அவரது கொள்கைகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற முடியாது என்றார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், அம்பேத்கரின் திறமையை அங்கீகரித்தவர், நாட்டின் முதல் பிரதமர் நேரு. ஆனால், மோடி ஒரு இழிபிறவி. அவருக்கு மரியாதை என்பதே தெரியாது. இந்த நிகழ்ச்சியில், இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன? என்றார். இந்தவிவகாரம் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் பலரும் மணிசங்கர் ஐயருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் நரேந்திர மோடி பேசும் போது,

நன்கு படித்த ஒருவர், என்னை இழிபிறவி என்கிறார். எனது சாதியை கேள்விக்கு உள்ளாக்குகிறார். இது, குஜராத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு. இதற்கு பதிலுக்கு பதிலாக யாரும் லாவணி பாட வேண்டாம் என்று கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். குஜராத் மைந்தனுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கு குஜராத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்து உங்கள் பதிலை அளியுங்கள் என கூறினார்

மணிசங்கர் அய்யர் மீது நேற்று இரவு காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, 'பிரதமர் மோடி மீதான மணிசங்கர் ஐயரின் விமர்சனம் சாதிய ரீதியிலானது. இது தொடர்பாக மன்னிப்பு கேட்பது, பின்னர் அவரைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவது என்பதை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com