5 குட்டிகளை ஈன்ற தெருநாய்... அச்சத்தால் அரசு பள்ளிக்கு விடுமுறை

தெரு நாய்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
5 குட்டிகளை ஈன்ற தெருநாய்... அச்சத்தால் அரசு பள்ளிக்கு விடுமுறை
Published on

பாலக்காடு,

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் சூண்டல் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. சாலையில் நடந்து செல்பவர் கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடித்து வருகின்றன. இதனால் சிலர் காயமடைந்து உள்ளனர். மேலும் தெரு நாய்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

இதற்கிடையே சூண்டல் பகுதியில் சமீபத்தில் 7-ம் வகுப்பு மாணவர், பிளஸ்-2 மாணவர் உள்பட 3 பேரை தெருநாய்கள் கடித்தன. இதற்கிடையே சூண்டல் அரசு பள்ளி வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக தெருநாய் ஒன்று பள்ளி வளாகத்தில் 5 குட்டிகளை ஈன்றுள்ளது.

அந்த நாய் ஒரு மாணவனை கடித்ததை தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே ஏற்பட்ட அச்சத்தால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறும்போது, கல்வித்துறை அனுமதி உடன் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. பள்ளி வளாகத்தில் இருந்து தெரு நாய்கள் மற்றும் அதன் குட்டிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பின்னரே பள்ளி மீண்டும் திறக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று தெருநாய் மற்றும் 5 குட்டிகளை பிடித்து சென்றனர். தொடர்ந்து பள்ளி நாளை முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com