ஊடுருவலுக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: 2 நாள் மாநாட்டில் அமித்ஷா அறிவுறுத்தல்

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாட்டில் பெரிய அளவிலான தேச பாதுகாப்பு சவால்களுக்கு தீர்வுகள் காண்பது பற்றி ஆலோசிக்கப்படும்.
ஊடுருவலுக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்:  2 நாள் மாநாட்டில் அமித்ஷா அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி

ஊடுருவலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி 2 நாள் மாநாட்டில் அமித்ஷா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

டெல்லியில் நடப்பு ஆண்டுக்கான 9-வது தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு நேற்று (24-ந்தேதி) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள 850-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பூஜ்ய சகிப்புத்தன்மை

இந்த மாநாட்டில், ஊடுருவலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து அமைப்புகளுக்கும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். ஊடுருவலுக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் என கூறியதுடன், பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்படியும் கேட்டு கொண்டார்.

இந்த மாநாட்டின் முதல் நாளில், பயங்கரவாத ஒழிப்புக்கான சவால்களுக்கு பதிலடி கொடுத்தல், இணைத்தல், பகுப்பாய்வு மற்றும் பல முகமை மையத்தின் வழியே உளவுத்துறையை செயல்படுத்துதல், போதைப்பொருள் கட்டுப்பாடு, கண்டறிதல் மற்றும் சட்டவிரோத அகதிகளை நாடு கடத்துதல் பற்றிய தொலைநோக்கு ஆவணம் உட்பட தேசிய பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள் தொடர்பான ஆலோசனையில் கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

இந்த மாநாட்டில் உள்துறை இணை மந்திரிகள், மத்திய உள்துறை செயலாளர், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், மத்திய ஆயுத போலீஸ் படைகளின் தலைவர்கள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதுதவிர, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் டி.ஜி.பி.க்கள் மற்றும் இளம் காவல் அதிகாரிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் மாநாடு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, 2021-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாட்டில் பெரிய அளவிலான தேச பாதுகாப்பு சவால்களுக்கு தீர்வுகள் காண்பது பற்றி ஆலோசிக்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com