

பெங்களூரு,
சாம்ராஜ்நகர் டவுனில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மட்டும் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 18 கொரோனா நோயாளிகள் திடீரென இறந்தனர். நள்ளிரவுக்கு பிறகு அதிகாலை வரை மேலும் 6 நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக மொத்தம் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 24 கொரோனா நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் நோயாளிகள் இறந்ததாக அவர்களின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
சாம்ராஜ்நகரில் கொரோனா நோயாளிகள் சிலர் திடீரென இறந்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமனம் செய்துள்ளேன்.
இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.