கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை ‘தீவிரமாக அமல்படுத்துங்கள்’ - மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை ‘தீவிரமாக அமல்படுத்துங்கள்’ - மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற பணிகளும் முடங்கி உள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இதை கருத்தில் கொண்டு 20-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவித்த மத்திய அரசு, அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதில், எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்பது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் இதுவரை 17 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 543 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளை மக்கள் சரிவர பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் சில மாநில, யூனியன்பிரதேச நிர்வாகங்கள், பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையில் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அந்த வழிகாட்டு நெறிமுறைகளை நீர்த்துப் போக செய்துவிடக்கூடாது. அத்துடன் அந்தந்த பகுதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தேவைப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம்.

கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்றி செயல்படவேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து இருந்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவது கொரோனா பரவல் அச்சுறுத்தலை அதிகரிக்கும்.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட் சில மாநிலங்களில் டாக்டர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து உள்ளன. சமூக விலகல் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதும், நகர்ப்புறங்களில் வாகன போக்குவரத்து நடைபெறுவது கவலை அளிக்கிறது. இது போன்றவை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com