

கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் முற்றுகையிட்டு பல்வேறு நலத்திட்டங்களில் கமிஷனாக பெற்ற பணத்தை திருப்பித்தரும்படி கேட்டு போராட்டம் நடத்தினார்கள். கட்சியின் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பயனாளிகளிடம் இருந்து கமிஷன் வாங்கியவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள். ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் 25 சதவீதம் வரை கமிஷன் பெற்றதாக சிலர் கூறுகின்றனர். இதையெல்லாம் நிறுத்திவிடுங்கள். எனது கட்சிக்கு திருடர்கள் தேவையில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அரசு நலத்திட்ட உதவிகளுக்கு கமிஷன் வாங்கிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் மீது இ.பி.கோ. 409 சட்டத்தின்கீழ் (நம்பிக்கை மோசடி) வழக்கு பதிவு செய்யப்படும். இதில் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.