

புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள்ஒதுக்கீடு செய்து கடந்த ஜூன் 22ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14ந் தேதி தீர்ப்பு கூறினார்.
இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர், தமிழக அரசின் அரசாணை அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை என்றும், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும் கூறி ஜூலை 31ந் தேதி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:
மாநில பாடதிட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது மாநில அரசின் கொள்கை சார்ந்த நடவடிக்கை ஆகும். இதுபோன்ற மாநில அரசின் நடவடிக்கைகளில் கோர்ட்டு தலையிடுவது அடிப்படை உரிமையை மறுக்கும் செயல்.
இந்த அரசாணை யாருடைய உரிமையையும் மீறும் வகையில் வெளியிடப்படவில்லை. பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மாநில அரசு பாடதிட்டம் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது. எனவே, மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதில் அசவுகரியங்கள் ஏற்படுவதால், அவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 90 சதவீதத்துக்கும் மேலான மாணவர்கள் மாநில பாடதிட்டத்திலேயே பாடம் பயில்கிறார்கள். மாநில பாடதிட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தில் உள்ள வேறுபாடுகளை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட்டு, அரசாணையை ரத்து செய்து இருக்கிறது. இரு பாடதிட்டங்களிலும் பயின்ற மாணவர்களையும் சமமாக கருதி சேர்க்கையை நடத்துவது சரியானதாக இருக்காது. மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும் வாய்ப்பை வழங்குவது மாநில அரசின் கடமையாகும்.
எனவே, சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, கிரி, கே.விஜயகுமார் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, நளினி சிதம்பரம், கே.கே.மணி, சிவபால முருகன் ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்கள் வாதத்தின் போது கூறியதாவது:
மாநில பாட திட்டம் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபாடானது. சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களுடன் மாநில பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களை சமன்படுத்தும் நோக்கிலேயே தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டு உள்ளது.
மேலும் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் பயிலும் மாணவர்கள் 10 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
இந்த அரசாணையில் உள்ள இட ஒதுக்கீட்டை மாநில பாடதிட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு அளிக்கவில்லை என்றால் மாநில ஒதுக்கீட்டில் நிரப்ப வேண்டிய மருத்துவ கல்லூரி இடங்கள், மாநிலத்தில் குறைந்த சதவீதத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பயின்ற மாணவர்களால் மட்டுமே பெருவாரியாக நிரப்பப்படும். இதனால் மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேரமுடியாத நிலை ஏற்படும்.
மேற்கண்டவாறு தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் வருமாறு:
இதுபோன்ற உள்ஒதுக்கீடுகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு தரப்பு மாணவர்களின் சமவாய்ப்புகளை கேள்விக்குறி ஆக்குகிறது. குஜராத் மாநிலத்தில் இதேபோன்ற அரசாணை ஒன்று வெளியிடப்பட்ட போது, அதற்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. இது தொடர்பான குஜராத் அரசின் மேல்முறையீட்டு மனு கடந்த 8ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் இதே அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசின் அரசாணையை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது சரிதான்.
இவ்வாறு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த இந்திய மருத்துவ கவுன்சில் வக்கீல் கவுரவ் ஷர்மாவிடம் நீதிபதிகள், மாநில அரசு இதுபோன்று உள்ஒதுக்கீடு செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வு முறையை உருவாக்கிய போது, மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு இந்த தேர்வு மட்டுமே ஒரே வழிமுறை என்று திட்டவட்டமாக அறிவித்தது. மாநில பாடதிட்டம், சி.பி.எஸ்.இ. என்று மட்டுமல்லாமல் பல்வேறு பாடதிட்டங்களும் உள்ளன. எனவே மாணவர் சேர்க்கையில் இதுபோன்ற உள்ஒதுக்கீடுகளை அனுமதிக்க இடமில்லை என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறினார்கள்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
நீட் தேர்வு என்பது தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்காக வகுக்கப்பட்டது. மாநில பாடதிட்டம், சி.பி.எஸ்.இ. பாடதிட்டம் என்று மாணவர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டமுடியாது. மாணவர்கள் சேர்க்கையில் பாட திட்டங்களின் அடிப்படையில் இதுபோன்ற உள்ஒதுக்கீடுகளை அனுமதிக்க முடியாது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ள போது, மாநில அரசு இப்படி தனியாக வேறொரு வழிமுறையை முயற்சிப்பது சரியல்ல. எனவே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.