

திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் நித்தின் ராஜ் (வயது 23). இவர் கண்ணூர் மாவட்டம் அஞ்சரகண்டி அரசு மருத்துவக்கல்லூரியில் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படித்து வந்தார். அவரை கல்லூரி அனாடமி பாடப்பிரிவு பேராசிரியர்கள் 2 பேர், முதுநிலை மாணவர்கள் சிலர் ராகிங் செய்ததோடு, சாதி, மதத்தின் பெயரால் இழிவுபடுத்தி உள்ளனர். மேலும் அவரது நிறம் குறித்து கிண்டல் செய்ததோடு, மாணவரின் வறுமை நிலையை சுட்டிக்காட்டி கேலி செய்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நித்தின் ராஜ் கல்லூரி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு நித்தின் ராஜ் சமூக வலைத்தளத்தில் ஆடியோ வெளியிட்டு இருந்ததாக தெரிகிறது. அதில், அனாடமி பிரிவு பேராசிரியர்கள் ராம், சங்கீதா ஆகியோர் ராகிங் செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பேராசிரியர்கள் ராம், சங்கீதா ஆகிய 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சக்கரக்கல் போலீசார், பேராசிரியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கிடையே மருத்துவ மாணவர் தற்கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளம் மாநில கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி குழு அமைத்து, கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
அப்போது மாணவர் தற்கொலைக்கு பேராசிரியர் ராமின் ராகிங் கொடுமையே காரணம். அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் பேராசிரியர் ராம் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.